அரசுப் பள்ளிகளில் போதிய விளையாட்டு பயிற்சி உடற்கல்வி ஆசிரியர்கள் இன்றி தவிக்கும் அவலம்
தேனி: அரசுப் பள்ளிகளில் போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் விளையாட்டு பயிற்சி இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர். சில அரசுப் பள்ளிகளில் மைதானம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், மாணவர்கள் விளையாடுவதை தவிர்க்கின்றனர். இதற்கு தீர்வு காண பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 70, உயர்நிலைப் பள்ளிகள் 36 உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் நிரந்தர உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை.
பணிபுரியும் சில பகுதி நேர ஆசிரியர்கள் 2, 3 பள்ளிகளை சேர்த்து கவனிக்கின்றனர். அதேபோல் பல பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. சில பள்ளிகளில் மைதான இடங்கள் பராமரிப்பு இல்லை.
இம்மைதானங்களில் புதர்மண்டியும், பயன்படுத்த முடியாத சூழலும் நிலவுகிறது.
நிரந்தர ஆசிரியர்கள் உள்ள சில அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். மைதானம் இல்லாத, ஆசிரியர்கள் வசதி இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டிகளில், எண்ணிக்கைக்காக மட்டுமே பங்கேற்பது தொடர்கிறது. குடியரசு தின, பாரதியார் தின தடகள, குழு விளையாட்டு போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவர்களில் ஒரு சிலரே வெற்றி பெற்றனர்.
தற்போது நடந்து வரும் நீச்சல், வாள் சண்டை, டேக்வாண்டோ, பீச் வாலிபால் உள்ளிட்ட போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து பங்கேற்க கூட மாணவர்கள் இல்லை.
காரணம் அவர்களுக்கு இந்த போட்டிகளில் பங்கேற்க பயிற்சி இல்லை. தனியார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் சில அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் நிலை உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் அனைத்து போட்டிகளுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடக்கும் போட்டிகளை சி.இ.ஓ., கண்காணிக்க வேண்டும். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதனால் விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் போது போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது தவிர்க்கப்படும்.