டீசல் நிரப்பியதற்காக ரூ .25 லட்சம் தராத பஸ் உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க்கில் பஸ்களுக்கு டீசல் நிரப்பிவிட்டு உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் வழங்காமல் மோசடி செய்ததாக தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்கள் வெங்கடேஸ்வரன், மனைவி இந்திரா, மகன் ராம்விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி சக்கம்பட்டி சுப்பன் காலனி தெரு கணேஷ்குமார். இவர் அப்பகுதியில், சீதாலட்சுமி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். தேனியை சேர்ந்த வெங்கடேஸ்வரன், மனைவி இந்திரா, மகன் ராம்விஜய் ஆகியோர் பஸ் கம்பெனி நடத்தி வருகின்றனர்.
வெங்கடேஸ்வரன், கணேஷ்குமாரிடம், தினசரி பஸ்சிற்கு டீசல் நிரப்பிவிட்டு அதற்கான தொகையை மாத இறுதியில் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு கணேஷ்குமார் ஒத்துக் கொண்டார்.
அதன்பின் 2020 ஜனவரி முதல் மார்ச் வரை நிறுவன பஸ்களுக்கு ரூ.25 லட்சத்திற்கு டீசல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் தராமல் காலதாமதம் செய்தனர். கணேஷ்குமார் 2024 நவ.10ல் அன்னஞ்சி விலக்கில் உள்ள பஸ் நிறுவன பணிமனைக்கு சென்று பணம் கேட்டார். அதற்கு மூவரும் இணைந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம், கணேஷ்குமார் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் பஸ் நிறுவன உரிமையாளர்கள் மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.