கஞ்சா மொத்த வியாபாரியை பிடிக்க ஒடிசா, கேரளா சென்ற தனிப்படை
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு போலீஸ் சோதனை சாவடியில் காரில் 26.500 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைதாகினர். இதில் மூளையாக செயல்பட்ட ஒடிசா கஞ்சா வியாபாரி சூரஜ், கேரளா சில்லறை வியாபாரி ராஜேஷை பிடிக்க தனிப்படை போலீசார் இரு மாநிலங்களுக்கு சென்றனர்.
காட்ரோடு சோதனை சாவடியில் டிச.2ல் வாகன சோதனையில் காரில் 26.500 கிலோ கஞ்சா கடத்திய கேரளாவைச் சேர்ந்த சஜூ, இவரது நண்பர் சோனி கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரு அலைபேசி, ரூ.12,570 யை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் விசாரணையில்: ஆந்திரா, நெல்லூர் அருகே பிரம்மதேவ் இடத்தில் கம்பெனியில் சஜூ வேலை செய்துள்ளார். ஒடிசாவை சேர்ந்த சூரஜ் நண்பரானார்.
ஒடிசாவில் மொத்தமாக சூரஜ் கஞ்சா வாங்கி, கம்பெனி பணியாளர்களிடம் சில்லறை வியாபாரமாக கஞ்சா விற்றுள்ளார். இதில் சஜூ, சூரஜ்ஜிற்கு உதவியுள்ளார்.
இதனை சஜூ, கேரளா கொல்லத்தில் ஆட்டோ டிரைவரான சோனியிடம் தெரிவித்துள்ளார்.
சோனி தனது நண்பரான ராஜேஷ் மூலம் கொல்லத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். வியாபாரம் சூடு பிடித்துள்ளது தெரிந்தது.
தேவதானப்பட்டி போலீசார் ஒடிசா கஞ்சா மொத்த வியாபாரி சூரஷையும், கேரளாவைச் சேர்ந்த சில்லரை வியாபாரி ராஜேஷை பிடிக்க தனிப்படை போலீசார் இரு மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர்.