உலக மண் தின விழிப்புணர்வு அரசு தோட்டக்கலை கல்லூரியில் பேரணி
பெரியகுளம், டிச. 6: பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வள மேலாண்மை துறை சார்பாக உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜாங்கம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி மாணவ மாணவியர் மண்வளப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணை முடிந்த பின்னர் கல்லூரி முதல்வர் ராஜாங்கம் மண்வளம் குறித்து பேசுகையில், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் மண்வளம் பயன்பாடு பற்றியும், மண்வளம் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மண்ணின் முக்கியத்துவம் பறை சாற்றும் வகையில் உலக மண்தின விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுவது குறித்தும் விளக்கினார். இந்த விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.