கருவூலம் மூலம் சம்பளம் ஊராட்சி செயலர்களுக்கு வழங்காவிட்டால் போராட்டம்
கம்பம்; ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் கருவூலம் மூலம் வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தேனி மாவட்டம் கம்பத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடத்துகிறது. ஊராட்சி பணிகளை நிர்வகிக்கும் செயலருக்கு சிறப்பு கால முறை ஊதியமாக ரூ.29 ஆயிரம் மாதம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் ஊராட்சி நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. ஊராட்சி தலைவர், துணை தலைவர் செக்கில் கையெழுத்திட்டால் தான் சம்பளம் கிடைக்கும். இவர்கள் கூறுவதை செயலர்கள் செய்யவில்லை என்றால் சம்பள செக்கில் கையெழுத்திடாமல் இழுத்தடிப்பார்கள். இதனால் செயலர்களுக்கு சம்பளம் பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
ஊராட்சி செயலாளர்கள் சம்பளத்தை கருவூலம் மூலம் வழங்க நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்தாண்டு சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பளம் கருவூலம் மூலம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறுகையில், ”ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியத்தை, அந்தந்த கிளை கருவூலங்கள் மூலம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.