ஆன்லைன் மோசடிக்காக விலைக்கு வாங்கப்படும் வங்கி கணக்குகள் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்
தேனி : ஆன்லைன் மோசடிக்காக வங்கி கணக்குகளை விலைக்கும், கமிஷனுக்கும் வாங்கி மோசடி ஈடுபடுவதால் அப்பாவிகள் போலீசில் சிக்கி வருவது தொடர்கிறது.
ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் படித்தவர்கள் பலரும் பணத்தை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இவர்களை சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் ஆசாமிகள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப சொல்கின்றனர். அடுத்த பரிவர்த்தனைகளுக்கு வெவ்வேறு வங்கி கணக்கை தெரிவித்து அதற்கு பணம் அனுப்ப கூறுகின்றனர். இந்த மோசடிகளுக்கு அப்பாவிகள் பலரின் வங்கி கணக்குகளை விலை கொடுத்தும், கமிஷனுக்காகவும் பயன்படுத்துகின்றனர். மோசடி ஆசாமிகள் சிக்கும் போது வங்கி கணக்கு விபரங்களை வழங்கியவர்களும் போலீசில் சிக்குகின்றனர்.
இவ்வகை மோசடிகள் பற்றி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி கணக்குகளை பணம் கொடுத்து வாங்கி ஆன்லைன் மோசடி கும்பலுக்கு விற்பனை செய்யும் ஏஜன்டுகள் பலர் செயல்படுகின்றனர். இவர்கள் படிக்காத அப்பாவிகளை குறிவைக்கின்றன
அவர்களை ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு துவங்க பணம் கொடுக்கின்றனர். பின் அவர்களிடம் ஒரு தொகை வழங்கி வங்கி கணக்கு தொடர்பான பாஸ்புக், சிம்கார்டு, ஏ.டி.எம்., கார்டுகளை வாங்குகின்றனர்.
இதனை ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு ஏஜன்டுகளிடம் வங்கி கணக்குகளை வழங்குபவர்களின் கணக்குகளுக்கு ஆன்லைன் மோசடி பணம் பரிமாற்றம் செய்து, ‘நெட் பேங்கிங்’ மூலம் வேறு வங்கிகளுக்கு மாற்றி கொள்கின்றனர்.
இந்த மோசடி ஏஜன்டுகள் பெரிய வலைப்பின்னல் அமைப்பில் உள்ளனர். சமீபத்தில் ஆன்லைன் மோசடியில் கைதான புதுக்கோட்டை வியாபாரியின் வங்கி கணக்கை பெற்ற ராமநாதபுரம் ஏஜன்ட் வடமாநில கும்பலுக்கு விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்யப்படும் வங்கி கணக்குகள் வெளி மாநிலங்களில் இருந்து பரிவர்த்தனை மூலம் மோசடிக்கு பயன்படுத்தகின்றனர். இந்தவழங்கில் இருவரும் கைதாகி உள்ளனர்.
இதுபோல் பலமாவட்டங்களில் புதுவகை மோசடி தொடர்கிறது. பொதுமக்கள் தங்கள்வங்கி கணக்குகளில் யாரேனும் பெரிய தொகை மாற்றம் செய்து கமிஷன் தருகிறேன் என கூறினால் இதை நம்பி வங்கி கணக்கு விபரம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். என்றனர்.