பட்டமளிப்பு விழாவில் புலிகள் காப்பக துணை இயக்குனர் பேச்சு : சமுதாயத்தின் உயர்வுக்காக உழைத்து மாணவிகள் சாதனை நிகழ்த்த வேண்டும்
கூடலுார் : சமுதாயத்தின் உயர்வுக்காக உழைத்து மாணவிகள் சாதனை நிகழ்த்த வேண்டும் என கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் பேசினார்.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் 24வது பட்டமளிப்பு விழா செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார்.
மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மாணவிகள் அனைவரும் சமுதாயத்தின் உயர்வுக்காக உழைத்து சாதனை நிகழ்த்த வேண்டும். சம உரிமை சம அதிகாரத்தை அடைய கடினமான பாதையை கடந்து சுதந்திரமாகவும் அதிகாரத்துடனும் தனது லட்சியத்தை அடைய வேண்டும். வாழ்க்கை வெற்றிகரமாக அமைய தன்னம்பிக்கையுடன் நாம் கொண்ட இலக்கை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நீரை உருவாக்கும் சக்தி வனம். எனவே வனத்தை பாதுகாக்க வேண்டும். நீர் நிர்வாகம் பற்றியும் காடு மலைகளின் முக்கியத்துவத்தையும் மாணவிகள் முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும் என்றார்.
இளங்கலை பயின்ற 323, முதுகலை பயின்ற 43 மாணவிகள் என மொத்தம் 366 மாணவிகளுக்கு பட்டப் படிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2019- -2022 ம் கல்வியாண்டில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் துறை சார்ந்த பாடத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 12 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஆலோசனைக் குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.