தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேனி, டிச.18: கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவர்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பாராட்டினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 39வது இளையோர் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும், தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் ஆகாஸ், சுஜீத் ஆகியோர் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடினர்.
இவர்களது அணி வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றது. இதனையடுத்து, சத்தீஸ்கரில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியிலும் இவ்விரு மாணவர்களும் தமிழ்நாடு அணியின் சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். இவ்விரு போட்டிகளிலும் பதக்கங்களை வென்ற தேனி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் ஆகாஸ் மற்றும் சுஜீத் ஆகியோரை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் வாழ்த்தி பாராட்டினார். அப்போது தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகர் முருகன் உடனிருந்தார்.