நெல் கொள்முதல் நிலையம் வேண்டும், டாஸ்மாக் வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
மேல்மங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகளும் , ஆண்டிப்பட்டி அருகே அனுப்பட்டியில் புதிய டாஸ்மாக் அமைக்க வேண்டாம் என பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனிப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனு விபரம்:
மேல்மங்கலம் வராகநதி பாசன நீரினைப்பயன்படுத்துவோர் சங்க தலைவர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், மேல்மங்கலம் கிராமத்தில் கோடையில் 700 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கிராமத்தில் ஏற்கனவே இரு இடங்களில் செயல்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
ஆண்டிப்பட்டி தாலுகா அனுப்பட்டி கிராம பெண்கள் சங்க நிர்வாகி அழகேஸ்வரி தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், அனுப்பட்டியில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப வன்முறையில் 3 பெண்கள் இறந்துள்ளனர்.
கிராமத்தில் டாஸ்மாக் அமைக்க பணிகள் நடந்து வரும் பகுதில் பள்ளியும் உள்ளது. இதனால் மாணவர்கள் குடிக்கும் நிலையும், மாணவிகள் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. அரசு அங்கு டாஸ்மாக் அமைக்க வேண்டாம். பணியை நிறுத்த வேண்டும்.
மனுவில், ராமலிங்காபுரம் நீர் ஓடையில் தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் மின்கம்பம் நடம் பணிகள் நடக்கிறது.
மழைகாலத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து உயிர் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. நீர் ஓடையில் மின்கம்பம் நடும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது.
போடி மணியம்பட்டி பொதுமக்கள் வெண்ணிலா, முத்துமாரியம்மாள் தலைமையில் மனு அளித்தனர்.
மனுவில், சொந்த வீடு இன்றி வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை, பட்டா வழங்க வேண்டுகிறோம். என்றிருந்தது.
வெண்மணி நகர் பொதுமக்கள் மனுவில், தப்புக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசு கலை அறிவியல் கல்லுாரி அருகே வெண்மணி நகரில் கூரை, தகரவீடு அமைத்து குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் அமைத்து தர வேண்டும். என்றிருந்தது.