கலெக்டர் பேச்சு கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு : இளைஞர்கள் தொழில் முனைவோராக வேண்டும்
ஆண்டிபட்டி, : ‘இளைஞர்கள் அரசு வேலையை மட்டும் எதிர்பார்க்காமல் தொழில் முனைவோராக மாற வேண்டும் என தேனி கலெக்டர் ஷஜீவனா பேசினார். ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது.
வேலைவாய்ப்பு மதுரை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கலெக்டர் பேசியதாவது: இளைஞர்கள் அரசு வேலையை மட்டும் எதிர்பார்க்காமல் தொழில் முனைவோராக உருவாக தேவையான பயிற்சிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் வாழ்க்கையை தங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்தி முன்னேற வேண்டும். தேனி வேலை வாய்ப்பு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சிறந்த வல்லுநர்களால் மாதிரி தேர்வு,மாதிரி நேர்காணல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். சமுதாய முன்னேற்றத்தில் எனது பங்களிப்பு என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமபிரபா, துணை கலெக்டர் (பயிற்சி) டினு அரவிந்த், கல்லூரி முதல்வர் சுஜாதா கலந்து கொண்டனர்.