இந்தியா சார்பில் 5 பதக்கம் வென்ற தேனி வீராங்கனை
தேனி : மலேசியாவில் நடந்த காதுகேளாதோர், வாய்பேச இயலாதவர்களுக்கான போட்டியில் தேனியை சேர்ந்த வீராங்கனை பிரியங்கா 2 தங்கம் உட்பட 5 பதக்கம் வென்றார்.
மலோசியா தலைநகர் கோலாம்பூரில் டிச.,1 முதல் 8 வரை ஆசிய பசுபிக் நாடுகளைச் சேர்ந்த காதுகேளாதோர், வாய்பேச இயலாதவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது.
இந்தியா சார்பில் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். தேனி அரண்மனைப்புதுார் முல்லைநகரை சேர்ந்த வீராங்கனை பிரியங்காவும் போட்டிகளில் பங்கேற்றார்.
இவர் 1600 மீ., கலப்பு பிரிவு தொடர் ஓட்டம், 1600 மீ., தொடர் ஓட்டம் பிரிவுகளில் தங்கபதக்கம் வென்றார்.
அதே போல்100மீ., 200 மீ., 1600 மீ., போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற வீராங்கனை கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவரது தாய் உஷா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.