பெண் வழக்கறிஞரை மிரட்டிய இருவர் மீது வழக்கு
போடி : போடி குலாலர்பாளையம் பங்காரு தெருவை சேர்ந்தவர் லதா 31. இவரது கணவர் முகமது யாசிப் 35. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வழக்கறிஞர்கள். முகமது யாசிப் தென்காசியில் சட்ட அலுவலகத்தில் பணி புரிந்த போது, அதே அலுவலகத்தில் தென்காசி மேலகாரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன் ஜூனியர் ஆக பணிபுரிந்துள்ளார்.
அந்த அலுவலகத்தில் கணேசன் பணம் கையாடல் செய்ததால் கணேசனை, முகமது ஆசிப் பணியில் இருந்து நீக்கி உள்ளார்.
இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கணேசன் வழக்கறிஞர் லதாவின் அலைபேசிக்கு தகாத முறையில் குறுந்தகவல்களை அனுப்பியதாகவும், லதா அழைத்து பேசியதற்கு தகாத வார்த்தையால் கணேசன் பேசி உள்ளார்.
முகமது யாசிப் தென்காசிக்கு வந்தால் கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்ததாகவும், மீண்டும் அதே அலைபேசியில் தென்காசியை சேர்ந்த மைதீன் பிச்சை என்பவர், முகமது யாசிப்பை எப்படி திருமணம் செய்யலாம். போடியில் இருந்து தென்காசிக்கு முகமது யாசிப்பை அனுப்பி விட வேண்டும். இல்லாவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன் என மிரட்டியதாக லதா போலீசில் புகார் செய்துள்ளார். போடி டவுன் போலீசார் வழக்கறிஞர் லதாவை மிரட்டிய வழக்கறிஞர் கணேசன், மைதீன்பிச்சை இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.