தேனியில் முல்லையாற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றியவர்களை நேரில் அழைத்து கலெக்டர் பாராட்டு
தேனி, டிச. 21: தேனியில் முல்லையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை காப்பாற்றிய கோட்டைப்பட்டியை சேர்ந்தவர்களை தேனி கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டினார். தேனி நகர் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(78). இவர் நேற்று முன்தினம் காலை தேனி நகர் பென்னிகுக் நகர் பின்புறம் செல்லும் முல்லையாற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் தவறி விழுந்து வெள்ளப்பெருக்கில் இழுத்துச்செல்லப்பட்டார்.
அரண்மனைப்புதூரை கடந்து, கோட்டைபட்டி பகுதியில் அவரைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ரேணுகா, மீனா, சித்ரா, சாந்தி மற்றும் குமரேசன் ஆகியோர் தைரியமாக ஆற்றில் இறங்கி மீட்டனர். இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பலரும் முதியவரை காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரேணுகா, மீனா, சித்ரா, சாந்தி மற்றும் குமரேசன் ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.