இடுக்கியில் வாகன விபத்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் வாகன விபத்துகளும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இம்மாவட்டம் மலையோர பகுதி என்பதால் ரோடுகள் மிகவும் குறுகலாகவும், கடும் வளைவுகளை
கொண்டதாகவும் உள்ளதால் வாகன விபத்துகள் எளிதில் ஏற்படுகின்றன. தூக்கம் இன்மை, சோர்வு, அதிவேகம், ரோட்டோர வாகன நிறுத்தம், தொலை தூர பார்வை தடை, அலைபேசி உபயோகம் ஆகியவற்றால் விபத்துகள் நிகழுவதாக மோட்டார் வாகன துறையினரின் கருத்து. அதனால் வாகன விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்தாண்டு ஜன. ஒன்று முதல் நவ.30 வரை மாவட்டத்தில் 1134 விபத்துகள் ஏற்பட்ட நிலையில், அதில் உயிர் பலி ஏற்படுத்தும் வகையில் 85 விபத்துகள் நடந்தன. 97 பேர் பலியாகினர். 779 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில், 185 பேர் சிறிய காயங்களுடன் தப்பினர்.
விபத்தில் மிகவும் கூடுதலாக சிறிய ரக வாகனங்கள், டூவீலர்கள் ஆகியவை சிக்கின. 377 சிறிய ரக வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 11 விபத்துகள் மூலம் 13 பேர் பலியாகினர். 133 டூவீலர்கள் விபத்துகளில் 9 பேர் பலியாகினர். உயிர் பலி ஏற்படுத்திய விபத்துகள் அனைத்தும் மதியம் 3:00 இரவு 9:00 மணிக்கு இடையே நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.