தேனியில் 2 ஆண்டுகளாக பயனில்லாத 500 வீடுகள் : நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஆர்வமில்லை!
தேனி:போக்குவரத்து வசதி இல்லாததால் தேனி அருகே நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 500 குடியிருப்புகளில் வசிக்க மக்கள் ஆர்வம் காட்டாததால் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது.
தேனி அருகே பெரியகுளம் ஒன்றியம், வடவீரநாயக்கன்பட்டி அருகே ரூ.31.17 கோடி செலவில் 312 அடுக்கு மாடி குடியிருப்புகள், தேனி ஒன்றியம் தப்புக்குண்டு அருகே அரசு கலைக்கல்லுாரி பின் பகுதியில் ரூ.43.2 கோடி செலவில் 431 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், வீடுகளில் 50 சதவீத அளவில் கூட குடியிருக்க வில்லை. இந்த வீடுகள் தலா ரூ. 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.
அரசு மானியம் போக பயனாளிகள் ரூ.2.50 லட்சம் வரை செலுத்த வேண்டும். வங்கி கடன் வசதியும் வழங்கப்படுகிறது.
வீடுபெறுவோருக்கு சொந்த வீடு, நிலம், அரசு பணி ஆகியவை இருக்க கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காக நகர்புற நல மேம்பாட்டு வாரியம் சார்பில் பலமுறை முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆனால் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய முடியவில்லை.
தேனி நகரில் குட்செட் தெருவில் ஆக்கிரமிப்பில் வசித்தவர்கள், மயிலாடும்பாறையில் வனப்பகுதியில் குடியிருந்தவர்கள் என மொத்தம் 130 குடும்பங்கள் வரை வடவீரநாயக்கன்பட்டி அடுக்கு மாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 182 வீடுகள் பயன் இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் பூட்டுகளை உடைத்து சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். பூட்டியிருக்கும் குடியிருப்புகளில் மதுபாட்டில்கள், குப்பை என கொட்டுகின்றனர்.
ஆட்கள் புழக்கம் இல்லாததால் பல வீடுகளில் ஜன்னல் சன்சைடு பகுதிகளில் சேதமாகி வருகிறது. பயனாளிகள் குடியேறும் முன்னரே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப் பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சிரமம் அடைகின்றனர்.
அருகில் உள்ள தேனியில் படித்தால் கூட அவர்கள் விடுதிகளில் தங்க வேண்டிய சூழல் உள்ளது என குடியிருப்போர் புலம்புகின்றனர்.
தப்புக்குண்டுவில் உள்ள 431 வீடுகளில் இதுவரை 65 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
366 வீடுகள் பயன்பாடு இன்றி உள்ளது. இப் பகுதிக்கு ரோடு, விளக்கு வசதி இல்லை என குடியிருப்போர் புலம்புகின்றனர். தகுதியான பயனாளிகள் குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதிகளுக்கு டவுன்பஸ்கள் இயக்க நடவடிக்க எடுக்க குடியிருப்போர் வலியுறுத்தி உள்ளனர்