மோசடி தொகையில் கட்சிகளுக்கு நிதி வழங்கினேன் கைதான நபர் போலீஸ் விசாரணையில் தகவல்
மூணாறு : கேரளாவில் பாதி விலையில் பொருட்கள் வழங்குவதாக ரூ. கோடி கணக்கில் மோசடி செய்து கைதான அனந்துகிருஷ்ணன் அரசியல் கட்சியினருக்கு நிதி வழங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கோளப்ரா, 7ம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் அனந்துகிருஷ்ணன் 27. இவர் பாதி விலையில் ஸ்கூட்டர், லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்குவதாக கூறி ரூ. கோடிகணக்கில் மோசடி செய்தார். அவரை மூவாற்றுபுழா போலீசார் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்தனர். அவர் மாநிலம் முழுவதும் ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தொகையில் அரசியல் கட்சிக்கு நிதி வழங்கியதாகவும், அதன் பட்டியலை வெளியிடுவேன் என அவர் கூறியதால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் கட்சிகளுக்கு அனந்துகிருஷ்ணன் நிதி வழங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பானது
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் வர்க்கீஸ் கூறியதாவது: கட்சிக்கு நிதி திரட்டும் பணியை தலைமை செய்வதில்லை. அந்த பொறுப்பு ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி சில மாதங்களுக்கு முன் மூலமற்றம் பகுதியைச் சேர்ந்த குழு அனந்து கிருஷ்ணனை அணுகினர். அவர் வழங்கிய ரூ. இரண்டரை லட்சத்தை மாவட்ட குழுவின் வங்கி கணக்கில் செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரவு, செலவு கணக்குகளை முறையாக கையாண்டு வருகிறது. அவர் நிதி வழங்கிய போது மோசடி பேர்வழி என தெரியாது. அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். அப்போது அவர் கூறிய திட்டம் குறித்து சந்தேகம் எழுப்பினேன்.
எனக்கு சொந்தமாக வங்கி கணக்கு இல்லை. நான் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணம் வாங்கியதில்லை. எனது வங்கி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வந்ததாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றார்.