Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

காட்டன் ரக சேலைகள் விலை உயர்வால் விற்பனை மந்த நிலை

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலைகள் விற்பனையில் புதிய ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகளில் காட்டன் ரக சேலைகள் உற்பத்தியானது. கால மாற்றத்தில் கைத்தறிகள் நசிந்து போனதால் தற்போது 1000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆன்லைன் மூலமும் 200க்கும் மேற்பட்டவர்கள் சேலைகள் வியாபாரத்தை தொடர்கின்றனர். தினமும் இப்பகுதியில் 5000 சேலைகள் உற்பத்தியாகிறது. சக்கம்பட்டி,

டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படும். இந்தாண்டு கூலி உயர்வு பிரச்னையை முன்வைத்து விசைத்தறி நெசவாளர்கள் ஜனவரி 1 முதல் 25 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் விசைத்தறி நெசவாளர்களுக்கு 13 சதவீதமும், ஒப்பந்த அடிப்படையில் நூல் பெற்று சேலைகள் உற்பத்தி செய்து தரும் நெசவாளர்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்கப்பட்டது. கூலி உயர்வால் சேலைகளுக்கான அடக்க விலையும் உயர்ந்துள்ளது. சேலைகள் திடீர் விலை உயர்வால் மார்க்கெட்டில் எதிர்பார்த்த விற்பனை இல்லை. இதனைத் தொடர்ந்து காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தியாகும் சேலைகளுக்கு போட்டியாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சங்கரன்கோவில் பகுதிகளில் சேலைகள் உற்பத்தி ஆகிறது. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தியாகும் சேலைகளுக்கான கூலியை விட மற்ற இடங்களில் குறைவாகவே உள்ளது. இப்பகுதியில் தற்போது ரூ.450 முதல் 1500 விலையில் சேலைகள் உள்ளன. நெசவாளர்கள் கூலி உயர்வுக்கு பின் சேலைகளுக்கான விலை ரூ.50 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. திடீர் விலை உயர்வு வியாபாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கோடை துவங்கும் நிலையில் காட்டன் ரக சேலைகளுக்கு தேவை அதிகம் இருக்கும். இன்னும் சில வாரங்களில் விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மாறிவிடும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *