உழவர் சந்தையில் அடிதடி தகராறில் ஒருவர் கைது
கம்பம்; கம்பம் கோட்டை வாசல் கிழக்கு பகுதியில் வசிப்பவர் பாக்யலட்சுமி, இவர் இங்குள்ள உழவர் சந்தையில் கறிவேப்பிலை, மல்லித் தழை வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு உழவர் சந்தைக்கு கறிவேப்பிலை லோடு வந்துள்ளது. பாக்யலட்சுமியின் மகன் சிவக்குமார், அங்கிருந்த லோடுமேன் சிவா மூலம் கறிவேப்பிலை மூடைகளை இறக்கியுள்ளார்.
அங்கு வந்த சிவாவின் தந்தை முருகன் 58, மூடைகளை இறக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவக்குமாருடன் தகராறு செய்துள்ளார். முருகனுக்கும், சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த சிவா, தனது தந்தையுடன் எப்படி வாக்குவாதம் செய்யலாம் என கூறி சிவக்குமாரை தாக்கியுள்ளார். முருகனும் அடித்து சிவக்குமாரை காயப்படுத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த சிவக்குமார், தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பம் தெற்கு போலீசார் முருகனை கைது செய்து, சிவாவை தேடி வருகின்றனர்.