மரக்கன்று நட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
கூடலுார்; கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர்.
கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பினர் தொடர்ந்து 385வது வாரங்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
கூடலுார், லோயர்கேம்ப், கம்பம் நெடுஞ்சாலை, குள்ளப்பகவுண்டன்பட்டி ரோடு, தாமரைக்குளம் ரோடு, 18ம் கால்வாய் கரைப்பகுதிகளில் வேம்பு,இலவம், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.]
பல இடங்களில் மரங்களாக வளர்ந்து குளுமையாக காட்சி தருகின்றன.
கடந்த தீபாவளி அன்று ‘வெடிக்கு பதில் செடி’ என்பதை வலியுறுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு தீபாவளி கொண்டாடினர்.
இந்நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உறுப்பினர் அனைவரும் ஒருங்கிணைந்து கூடலுார் லோயர்கேம்ப் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு புத்தாண்டு விழாவை கொண்டாடினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 2025 இயற்கையோடு இணைந்த ஆண்டாகவும், இயற்கையோடு இணைந்து செயல்படவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் புதிதாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டது.