போலீசாரை வீச்சரிவாளால் வெட்ட முயன்றவர் கைது
தேவதானப்பட்டி: தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே போலீசாரை அவதுாறாக பேசி வீச்சரிவாளால் வெட்ட முயன்ற சந்துருவை 24, போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி மாயாண்டி தெரு சந்துரு. அங்கு புஷ்பராணி நகரில் இரட்டை புளியமரம் அருகே நின்று கொண்டிருந்தார். சிறப்பு எஸ்.ஐ., சிவசம்பு, போலீசார் வாலிராஜன், வினோத் ஆகியோர் குற்றத்தடுப்பு சம்பந்தமாக அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற சந்துருவிடம் அதுகுறித்து கேட்டனர். அதற்கு சந்துரு, தனது முதுகுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த இரண்டரை அடி நீளம் கொண்ட வீச்சரிவாளை காட்டி, போலீசாரை மிரட்டி அவதுாறாக பேசினார். பின் ‘இது எங்க ஏரியா.
நான் அப்படித்தான் நிற்பேன்’ என்றார். மேலும் ‘எனது உறவினர் ஜெகதீஸ்வரனை கொலை செய்தவர்களை, நான் கொலை செய்யாமல் விட மாட்டேன்’ என, போலீசாரை அதே அரிவாளால் வெட்ட முயன்றார்.
இதையடுத்து சந்துருவை, எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை கைது செய்து, வீச்சரிவாளை பறிமுதல் செய்தார். சந்துரு மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.