Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தேனி:தேனியில் 16 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த தேனி வள்ளிநகரைச் சேர்ந்த மும்மூர்த்திக்கு 22, இருபதாண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதுரை மாவட்டம் 39 வயது துாய்மை பணியாளர். அவரது 37 வயது மனைவி. இத்தம்பதிக்கு மனபிறழ்வு பாதித்த மகன் உள்ளார். 2022ல் தேனியிலுள்ள தம்பி வீட்டில் துாய்மைபணியாளர் குடும்பத்தினருடன் தங்கினார்.

2022 மே 13 ல் சிறுவன் வெளியே சென்றவர் திரும்பவில்லை. விசாரித்த போது வள்ளிநகரில் வசிக்கும் பாலமுருகன் மகன் மும்மூர்த்தி சிறுவனை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுபலாத்காரம் செய்தது தெரிந்தது.

அங்கிருந்த சிறுவனை தாயார் மீட்டு அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். சிறுவன் மனபிறழ்வு பாதிப்பு உள்ளவர் என்பதால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் அளித்து விசாரணை நடந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. மும்மூர்த்தியை அல்லிநகரம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மும்முர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் எதிர்கால நலன் கருதி ரூ.4.90 லட்சம் இழப்பீடு அரசு வழங்கவும், அதில் சிறுவனின் மருத்துவ செலவினங்களுக்காக ரூ.50 ஆயிரத்தை அவரது தாயாரிடம் வழங்கவும், மீதமுள்ள ரூ.4.50 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு சிறுவன் பெயரில் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *