Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மாடி தோட்டத்தில் கொத்துக் கொத்தாய் காய்க்கும் காய்கறிகள் இயற்கை சாகுபடியில் அசத்தும் தம்பதி

போடி குலாலர்பாளையம் பங்காரு மேற்கு தெரு வீராச்சாமி சித்ராதேவி தம்பதி. இவர்கள் காய்கறி கழிவுகளை வீணாக்காமல் வீட்டிலேயே உரம் தயாரிக்கும் முறைகளை செயல்படுத்தி அசத்தி வருகின்றனர்.

இத்தம்பதியின் முயற்சியை மாவட்டத்தில் முன் மாதிரியாக தேர்வு செய்து சித்ரா தேவியை கலெக்டர் ஷஜீவனா, போடி நகராட்சி முன்னாள் கமிஷனர் ஜெயலட்சுமி பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்து உள்ளனர்.

இத்தம்பதியின் மாடித்தோட்டத்தில் ‘ரீங்காரமிடும்’ வண்டுகள், ‘ஸ்டிச்சிங் பேர்ட்’ உள்ளிட்ட பறவைகள் வந்து செல்வது தொடரும் நிகழ்வாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மாடியில் துாதுவளை, சித்தரத்தை, வல்லாரைக் கீரை, துளசி, வெற்றிலை, கற்பூரவள்ளி, மஞ்சள், குப்பைமேனி, மருதாணி உள்ளிட்ட மூலிகை செடிகள் உள்ளன.

காய்கறிகளில் கத்தரி, முள்ளங்கி, நுாக்கல், பீர்க்கங்காய், பச்சை மிளகாய், தக்காளி, வெண்டை, பாகற்காய், சுண்டக்காய், வெற்றிவல்லி கிழங்கு, பூசணி, சுரக்காயும், பருப்பு கீரை, முருங்கை, கரிசலாங்கண்ணி, மிளகு தக்காளி, அரைக்கீரை, வல்லாரை, பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, புளிச்சகீரை, பழங்களில் டிராகன் ஃபுரூட், எலுமிச்சை, பப்பாளி, சீத்தாப்பழம், பூக்களில் அடுக்குமல்லி, டேபிள் ரோஸ், செவ்வந்தி, மல்லி,

முல்லை, பன்னீர், நாட்டு ரோஸ், டிசம்பர் பூக்கள், செங்கரும்பு மட்டும் இன்றி அழகு தொடர்களுக்கான செடிகளும் வளர்த்துள்ளனர்.

பசுமை குடில்

சித்ராதேவி, குடும்பத் தலைவி: ஆறு ஆண்டுகளுக்கு முன் சிறு, சிறு தொட்டிகளில் காய்கறி, மூலிகைச் செடிகள் வளர்க்க துவங்கினோம்.

தற்போது வீட்டின் மாடியில் பெரிய அளவில் 2 தொட்டி கட்டப்பட்டும், 40க்கும் மேற்பட்ட சிறிய தொட்டிகளும், 30க்கும் மேற்பட்ட பசுமை பைகள், 20 பெயிண்ட் வாலிகளில் காய்கறி, கீரைகள், கரும்பு, மூலிகை செடிகள், பப்பாளி, டிராகன் புரூட், எலுமிச்சை கிழங்கு வகைகள் பயிரிட்டு வளர்த்து வருவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

மாடியில் வெயில், பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ‘பசுமை குடில்’ அமைத்து காய்கறிகளை அறுவடை செய்கிறோம். காய்கறி, கீரைகள் வெளியே வாங்குவது இல்லை.

இயற்கை முறையில் ஆன காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் உள்ளதாக உள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வண்ண, வண்ணப் பூக்களை கண்டு ரசிக்கும் போது மனதிற்கு சந்தோசத்தை தருகிறது.

தேவையான காய்கறிகளை பறித்து பயன்படுத்துகிறோம். வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக மாற்ற மாடித்தோட்டம் அமைக்கலாம்., என்றார்.

இயற்கை காய்கறி சாகுபடி

வீராச்சாமி, தொழில் முனைவர், போடி: நகராட்சி அறிவுரையின்படி மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக பிரித்து எடுக்கின்றோம்.

மக்கும் குப்பை, காய்கறி கழிவு, முட்டை ஓடுகள், செடிகளில் இருந்து உதிர்ந்த இலைகளை பெரிய பிளாஸ்டிக் டிரம்பில் கொட்டி மண்புழு சேர்த்து மக்கச்செய்து, உரமாக பயன்படுத்துகிறோம்.

மீன் கழிவுகளுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து சிறிய டிரம்மில் ஊற்றி காற்று படாமல், நிழலில் மூடி வைக்க வேண்டும்.

40 நாட்கள் கழித்து கரைசலாக மாறிய பின், ஒரு லிட்டருக்கு 10 மில்லி கலந்து செடிகளுக்கு தெளிக்கின்றோம். வாழைப்பழம், முட்டைத் தோல், டீ துாள் மிக்சியில் அரைத்து செடிகளுக்கு 2 ஸ்பூன் உரமிட்டு வருகின்றோம்.

வெளியில் உரமும் வாங்குவது இல்லை. இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி, செடிகள் வளர்ச்சி அடைகின்றன.

மாடித்தோட்டம் காய்கறி, பழங்கள், கீரைகளை வளர்த்து பராமரிப்பதன் மூலம் அதிக அளவில் அறுவடை செய்து தொடர்ச்சியாக பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் மாத பட்ஜெட்டில் சிறுதொகை சேமிக்க முடிகிறது., என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *