தேனியில் மாற்று வழியில் பஸ்கள் இயக்கம் அறிவிப்பு இன்றி பயணிகள் காத்திருப்பு
தேனி: பஸ்கள் மாற்றுவழியில் இயக்கப்படுவதை முறையாக அறிவிக்காததால், பயணிகள் பழைய பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.
தேனியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பால பணிகள், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜவாய்க்கால் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
பாலம் அகலப்படுத்தும் பணி நடந்து வருவதால் கம்பம், போடியில் இருந்து வரும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் மதுரை ரோடு செல்ல வேண்டும். மதுரை ரோட்டில் இருந்து கம்பம், போடி செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு பஸ் ஸ்டாண்டிலும் கம்பம், போடி செல்லும் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு, திண்டுக்கல்-குமுளி பைபாஸ் வழியாக செல்லும் என பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் பல பஸ்கள் இந்த வழியாக சென்றன. ஆனால் சில பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்றன. தேனி நகர் பகுதிக்கு வந்திருந்த கம்பம், போடி பகுதியை சேர்ந்தவர்கள் பஸ் வருமா, வராதா என தெரியாமல் பழைய பஸ் ஸ்டாண்டில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இது போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.