Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பழங்குடியினருக்கு பிரதமர் கவுரவத் தொகை வழங்க நடவடிக்கை தேவை மலை கிராமத்தினர் மனு

தேனி: பழங்குடியினருக்கு பிரதமரின் கவுரவத்தொகை (பி.எம்., கிஷான்) திட்டத்தில் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொக்கனலை கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தனர்.

இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 168 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

சொக்கன்அலையை சேர்ந்த பழங்குடியினர் நலகுழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் கிராமத்தினர் வழங்கிய மனுவில், ‘பழங்குடியின விவசாயிகளுக்கு பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் சொக்கனலை மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தாட்கோ மூலம் மானிய கடன் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கோரினர்..

டி.என்.டி., மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ராமமூர்த்தி மனுவில், ‘தென்கரை பேரூராட்சியில் தண்ணீர் கட்டணம் செலுத்த மீட்டர் பொருத்தி உள்ளனர்.

இதனால் மாதந்தோறும் ரூ.100க்கு மேல் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க’ கோரினார்.

உத்தமபாளையம் காமாட்சி புரம் விஜயா மனுவில், புதிய ரேஷன்கார்டு கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

மாற்றுத்திறனாளி மகளுக்கு அடையாள அட்டை பெறுவது, உள்ளிட்டவற்றிற்கு ரேஷன் கார்டு அவசிய தேவையாக உள்ளது. ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *