Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்தும்… பயனில்லை; ஓராண்டாக அதிருப்தியில் சாகுபடி விவசாயிகள்

கம்பம: ‘பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்து, ஓராண்டாகியும் சாகுபடியாளர்களுக்கு பலன் ஏதும் இல்லை.’ என, புலம்பும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஏற்றுமதிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, ஒயின் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அரசு முன் வர வேண்டும்.’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டு முழுவதும் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடியாகிறது. மகாராஷ்டிராவில் ஆண்டு முழுவதும் திராட்சை சாகுபடி நடப்பது இல்லை. நவம்பரில் துவங்கி மே வரை சாகுபடியாகிறது. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும்.

கம்பம் பள்ளத்தாக்கின் மண் வளம், கிடைக்கும் மழை, நிலவும் சீதோஷ்ண நிலையே இங்கு திராட்சை சாகுபடிக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர் திராட்சையே பிரதான இடத்தை பிடித்துள்ளது. கம்பம், சுருளிப் பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி வெள்ளையம்மாள்புரம், எரசை, தென் பழநி சீப்பாலக்கோட்டை போன்ற பகுதிகளில் விதையில்லா திராட்சை சாகுபடியாகிறது. காமயக் கவுண்டன்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கம் முயற்சியால், கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் பன்னீர் திராட்சைக்கு கடந்தாண்டு புவிசார் குறியீடு கிடைத்தது.

இதையும் படிங்க

சாலை நடுவே மின் கம்பம் விபத்து பீதியில் பொது மக்கள்

கரூர்

இதனால் சந்தையில் அங்கீகாரம் கிடைத்தது. விலை ஏற்றமோ, ஏற்றுமதி வாய்ப்போ கிடைக்கவில்லை.

திராட்சை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் முகுந்தன் கூறியதாவது: புவிசார் குறியீடு கிடைத்தது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அங்கீகாரமாக கருதுகிறோம். ஆனால் திராட்சை விலையிலோ, விற்பனையிலோ எந்தவித மாற்றமும் இல்லை. விவசாயிகளுக்கும் பலன் இல்லை. ஏற்றுமதி செய்யவோ வாய்ப்பு இல்லை.

ஒயின் தொழிற்சாலை ஒன்று அமைக்கவோ அறிவிப்புக்கள் அரசிடமிருந்து வரவில்லை. எனவே இப்பகுதியில் ஒயின் தொழிற்சாலை அமைக்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.

மேலும், பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய வேளாண் வணிகம், தோட்டக்கலைத்துறை முயற்சி செய்ய வேண்டும்.

அதற்குரிய தொழில் நுட்பங்களை திராட்சை ஆராய்ச்சி நிலையம் வழங்க வேண்டும்., என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *