18ம் கால்வாய் கரைப்பகுதியை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கப்படுமா; ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றாமலும், சீரமைக்காமலும் உள்ள 18ம் கால்வாய்க்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் சீரமைப்பு பணி துவக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 2008ல் துவக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மானாவாரி விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 47 கி.மீ., தூரமுள்ள இக்கால்வாயில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலை மதகுப் பகுதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இக் கால்வாயை நம்பி உத்தமபாளையம், போடி தாலுகாவில் 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
கரை உடைப்பு:
2021ல் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால் ஆக. 17ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 2022ல் செப். 14ல் திறக்கப்பட்டது. ஆனால் 2023ல் பெரியாறு அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்த போதிலும் இரண்டு மாதம் தாமதமாக டிசம்பரில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் தலைமதகு பகுதியில் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் தொட்டிப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டாவது முறையாக தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக கால்வாயில் முழுமையாக தண்ணீர் செல்லாமல் 44 கண்மாய்களில் 5 மட்டுமே நிரம்பியது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். 2024ல் தாமதமாக டிச.21ல் திறக்கப்பட்டது. கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமலும் சீரமைக்காமலும் இருந்ததால் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் விவசாயிகள் புலம்பினர்.
நிதி தேவை:
பல ஆண்டுகளாக 18ம் கால்வாய் கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. மேலும் பல இடங்களில் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்து தண்ணீர் முறையாக செல்ல முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாததால் கால்வாயை சீரமைக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தலை மதகுப் பகுதி,ொட்டி பாலம் அருகே தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் கரை உடையும் அபாயம் உள்ளது. அதனால் முன்கூட்டியே அரசு நிதி ஒதுக்கீடு செய்து லோயர்கேம்பில் இருந்து கடைமடை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைப்பகுதியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.