Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தேனி நகராட்சியில் ரூ.22 கோடி வரி பாக்கி வரி செலுத்தாதவர்களின் ஜி. எஸ்.டி., உரிமம் துண்டிக்க பரிந்துரை

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வரவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை ரூ.22 கோடி நிலுவையில் உள்ளன.

வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., உரிமம், மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை செய்ய உள்ளதாக நகராட்சி கமிஷனர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.

நகராட்சி கமிஷனர் ஏகராஜ் அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

இங்கு ஒருலட்சத்து 34ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குத்தகை ஏலம் உள்ளிட்டவை மூலம் ஆண்டிற்கு ரூ.22.74 கோடி நகராட்சிக்கு வருமானம் வருகிறது.

இதன் மூலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம், மின்கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த இரு ஆண்டுகளாக வரி பாக்கி இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை சொத்துவரி, ரூ.1.61 கோடி, காலிமனைவரி ரூ.6.74லட்சம், பாதாளசாக்கடை கட்டணம் ரூ.1.98 கோடி, குடிநீர் கட்டணம் ரூ. 6.01 கோடி குத்தகை இனங்கள் ரூ.1.72 கோடி என ரூ.11.38 கோடி பாக்கி உள்ளது.

இந்த ஆண்டில் சொத்துவரி ரூ. 4.25 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.3.50 கோடி தொழில்வரி ரூ.43.17 லட்சம் பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 75.20 லட்சம், குத்தகை இனங்கள் ரூ.1.72 கோடி, காலிமனை வரி ரூ. 19.99 லட்சம் என ரூ.10.75 கோடி பாக்கி நிலுவையில் உள்ளது.

மொத்தம் ரூ. 22 கோடி வரி, கட்டண பாக்கி உள்ளது. இவற்றை விரைந்து செலுத்த வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

நகராட்சி கடைகளுக்கு ரூ.3.45 கோடி வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வருகின்றனர். கடைகள் சீல் வைத்த மறு ஏலம் விடப்படும்.

உள் வாடகை விட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., உரிமம், மின் இணைப்பு துண்டிக்க அரசு துறைகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *