ரூ.2.50 கோடியிலான மின் மயானங்கள் செயல்படுவது எப்போது
ரூ.2.50 கோடியிலான மின் மயானங்கள் செயல்படுவது எப்போது; ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பகுதி மக்கள் சிரமம்
ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டும் மின் மயானங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கான சுடுகாடு ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, வைகை அணை ரோடு ஆகிய இடங்களில் உள்ளன. பேரூராட்சி 4வது வார்டில் மின் மயானம் அமைக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. 2020 — 2021ம் ஆண்டு அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ரூபாய் ஒரு கோடி செலவில் துவக்கப்பட்ட பணி ஆமை வேகத்தில் நடந்து தற்போது முடிந்துள்ளது.
உத்தமபாளையத்தில் மக்கள் தொகை 40 ஆயிரம் உள்ளனர். நகரின் பொது மயான வளாகத்தில் ரூ.1.50 கோடியில் எரியூட்டும் மயானம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3 சிலிண்டர்களுடன் கொண்ட எரியூட்டும் மயானம் பணிகள் நிறைவடைந்து ஒராண்டிற்கும் மேல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
மின் மயானம் இல்லாததால் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பகுதியில் இறந்தவர்களை எரியூட்ட கூடுதல் செலவாகிறது. விறகு,மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களுக்கு தட்டுப்பாட்டால் இவற்றின் விலையும் அதிகம் உள்ளது. இதனால் இறுதி சடங்கு பல ஆயிரம் ஆகிறது. ஆண்டிபட்டியில் இறந்தவர்களை தேனிமின் மயானத்திற்கு உடலை கொண்டு சென்றாலும் ஆம்புலன்ஸ் செலவு அதிகமாகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களை பிரேத பரிசோதனைக்கு பின் எரியூட்ட சென்றால் இரட்டிப்பு செலவாகிறது. இதனால் பலரும் பாதிப்படைகின்றனர்.
ஆண்டிபட்டியில் மின் மயானம் பயன்பாட்டிற்கு வந்தால் பேரூராட்சி, மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் இறந்த உடல்களையும் எரியூட்ட முடியும்.
உத்தமபாளையத்தில் பணி முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் உள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் எதற்காக பூட்டி வைத்துள்ளது என தெரியவில்லை. இங்கு சோதனை ஒட்டம் நடத்தி பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப் பிரச்னைகளில் கவனம் செலுத்திட வேண்டும்.
சோதனை ஓட்டம் ஏற்பாடு
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலர்கள் கூறியதாவது: மின் மயான பணிகள் முழு அளவில் முடிந்துள்ளது.
விரைவில் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. பிணங்களை எரியூட்டுவதற்கு முன் முன்னோட்டமாக மின்மயானத்தில் விறகு மற்றும் சில திடப்பொருள்களை எரியூட்டி சோதனை மேற்கொள்ளப்படும். சோதனை முடிந்த பின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இவ்வாறு தெரிவித்தனர்.