வேலைக்குத் திரும்பிய விசைத்தறி தொழிலாளர்கள்
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து தொழிலாளர்கள் இன்று முதல் வழக்கமான வேலைக்கு திரும்பினர்.
இப்பகுதியில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது.
புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜனவரி 1 முதல் வேலை நிறுத்தம் செய்தனர்.
பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஜனவரி 25ல் பெரியகுளம் சப் – கலெக்டர் ரஷத் பீடன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13 சதவீதமும், ஒப்பந்த அடிப்படையில் நூல் பெற்று சேலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதனை தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதற்கான ஒப்பந்தம் திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதனை தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று (ஜனவரி 28) முதல் வழக்கமான வேலைக்கு திரும்பி உள்ளனர்.