Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

வசந்தம் நகர் குடியிருப்போர் அவதி : போதிய தெரு விளக்குகள் வசதிகள் இல்லாததால் திருட்டு பயத்தில் தவிப்பு

தேனி : தேனி அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட வசந்தம் நகரில் போதிய தெருவிளக்குகள் இல்லாததல் இரவில் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. சேதமடைந்த ரோடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாக குடியிருப்போர் குமுறுகின்றனர்.

தேனி ஒன்றியம், அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்டு அரண்மனைப்பதுார், முல்லை நகர், கோட்டைப்பட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் 7 வார்டுகள் உள்ளன.

இதில் முல்லை நகர்பகுதியில் அரசு அலுவலர்கள் குடியிருப்பு, விஸ்தரிப்பு பகுதிகள், வசந்தம் நகர் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதில் வசந்தம் நகரில் 10 தெருக்கள் அமைந்துள்ளன.

இங்கு சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் குடியிருப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது.

குடியிருப்போர் விஜயலட்சுமி, மனோன்மணி, சுந்தரராஜன், பழனிசாமி கூறியதாவது: வசந்தம் நகரில் குடியிருப்புகள் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்பகுதிக்கு முல்லை நகர் மெயின் ரோடு வழியாக வருகிறோம். ஆனால் ரோடு பல இடங்களில் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு தற்போது செல்லரித்த நிலையில் சேதமடைந்துள்ளது. இங்குள்ள பல குறுக்குத்தெருக்களில் ரோடு வசதி இல்லை. இதனால் மழைகாலங்களில் சகதி காடாக காட்சியளிக்கிறது.

பலர் ரோட்டில் தடுக்கி விழுந்து காயமடைவது தொடர்கிறது.தெருக்களில் சாக்கடை அமைக்கவில்லை. இதனால், மழை காலத்தில் ரோட்டில் கழிவு நீருடன், மழைநீரும் ஆறாய் ஓடுகிறது. ஊராட்சி மூலம் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த தண்ணீர் கலங்களாக வழங்கப்படுவதால் பலரும் வீடுகளில் உள்ள ‘போர்’ தண்ணீரை மட்டும் குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. இப்பகுதிக்கு குப்பை வாங்க பணியாளர்கள் வருவதில்லை. இதனால் வேறு இடங்களுக்கு சென்று குப்பையை போடும் நிலை உள்ளது.

இரவில் தொடரும் திருட்டுவசந்தம் நகர் பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. சில இடங்களில் குடியிருப்போர் சொந்த செலவில் ஆங்காங்கே தெரு விளக்கு அமைத்துள்ளனர். பல இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

பல வீடுகள் பயன்பாடின்றி உள்ளதால் இரவில் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். பல இடங்களில் புதர்மண்டி காணப்படுவதால், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் காலை, மாலையில் நடைபயிற்சி செல்வோர் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வரும் சூழல் உள்ளது.இரவில் டூவீலரில் வருவோரை துரத்துவதால் பலரும் கிழே விழுந்து காயமடைகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்

15 ஆண்டுகளாக ரோடு வசதி இல்லாத தெரு

வசந்தம் நகருக்கு உட்பட்ட அப்துல்கலாம் 10வது தெருவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி வசிக்கின்றனர். இந்த தெருவிற்கு ஊராட்சி நிர்வாகம் ரோடு, வடிகால் வசதி என அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை. மெயின் தெரு மேடாகவும், வீடுகள் உள்ள தெரு பெரும் பள்ளமாக உள்ளது. கரடு முரடான தெரு உள்ளதால் டூவீலரை கூட தள்ளி கொண்டு செல்ல வேண்டும். மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனோடு சேர்ந்து விஷபூச்சிகளும் நுழைகிறது. ஊராட்சி நிர்வாகம் தெருவை சீரமைத்து ரோடு வசதி செய்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *