Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

காளாத்தீஸ்வரர்- ஞானாம்பிகை திருக் கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள் இன்று தேரோட்டம் நடக்கிறது

உத்தமபாளையம்; உத்தமபாளையத்தில் இன்று நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை காளாத்தீஸ்வரர் – ஞானம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர்

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது.

ராகு, கேது தம்பதியருடன் தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள கோயில்.

தென் காளஹஸ்தி என்றழைக்கப்படுகிறது. இந்த கோயில் தேரோட்டம் 2020க்கு பின் நடைபெறவில்லை.

இன்று காலை தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. வெண் பட்டில் காளாத்தீஸ்வரரும், பச்சைப்பட்டில் ஞானாம்பிகையும் சர்வ அலங்காரத்தில் மணமேடையில் எழுந்தருளினர். விசேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க , காலை 11:30 மணியளவில் காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கழுத்தில் மங்களநாண் சூடினார்.

கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ என கோஷமிட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமியும், அம்பாளும் ஊர்வலமாக இங்குள்ள கர்ணம் வீட்டிற்கு சென்று பாழும் , பழமும் சாப்பிட்டு பின் நகர் வலம் வந்தனர்.

திருக்கல்யாண ஏற்பாடுகளை உத்தமபாளையம் கர்ணம் குடும்பத்தாரும், கோகிலாபுரம் கிராமத்து பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர். இன்று அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் சுவாமியும், அம்பாளும் ரதம் ஏறுகின்றனர். காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் தேரோட்டம் துவங்குகின்றது. தேரோட்டம் நடைபெறுவதையொட்டி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *