சக்கம்பட்டியில் வேலைக்கு திரும்பாத வேஷ்டி உற்பத்தி தொழிலாளர்கள்
ஆண்டிபட்டி : சக்கம்பட்டியில் வேஷ்டி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தர மறுப்பதால் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்திற்கு வலியுறுத்தி ஜனவரி 1 முதல் வேலை நிறுத்தம் செய்தனர்.
சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியில் இருந்து 13 சதவீதமும், ஒப்பந்த அடிப்படையில் நூல் பெற்று சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வும் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.
சக்கம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காட்டன், பாலிஸ்டர் ரகங்களில் வெள்ளை, கலர் வேஷ்டிகள் உற்பத்தி நடந்து வருகிறது.
வேஷ்டி உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உற்பத்தியாளர்கள் கூலி உயர்த்தி தர சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வேஷ்டி உற்பத்தி தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:
சக்கம்பட்டியில் 9 விசைத்தறிக்கூடங்களில் வேஷ்டிகள் உற்பத்தியாகிறது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேஷ்டி உற்பத்தி செய்கின்றனர். இவர்களுக்கும் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி வேஷ்டி உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் இதற்கான முடிவு கிடைத்துவிடும். இவ்வாறு கூறினர்.