எ.புதுக்குளம் மதகு சீரமைக்காததால் கோடை சாகுபடி பாதிப்பு பராமரிக் க நிதி வழங்காததால் விவசாயிகள் சிரமம்
பெரியகுளம்; பெரியகுளம் அருகே எ.புதுக்குளத்தில் மதகு சீரமைக்காததால் கோடை சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் புலம்புகின்றனர்.
பெரியகுளம் அருகே முருகமலை செல்லும் பகுதியில் மஞ்சளாறு வடிநில கோட்ட நீர்வளத் துறைக்கு சொந்தமானது எ.புதுக்குளம். இக் கண்மாய்க்கு முருகமலை அடிவாரம் பெரியவாலாட்டி, சின்னவாலாட்டி, ஈச்சமலை, பூசணி மலைகளில் இருந்து வரும் நீர் செலும்பாற்றில் கலந்து எ.புதுக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
மேலும் வரட்டாறு, மலைகளில் பெய்யும் மழை, நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீரால் கண்மாய்க்கு நீர் வரத்து ஏற்படும். மழை காலங்களில் பரந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கும். 80 ஏக்கர் பரப்பளவிலான கண்மாய் நீரை நம்பி இருபோக நெல் சாகுபடியாக 400 ஏக்கர் நேரடியாகவும், 200 ஏக்கர் மறைமுகமாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். விவசாயத்தின் சுவாசமாக திகழும் கண்மாயில் முருகமலை குடியிருப்பு பகுதியில் வெளியேறும் கழிவுகள் சாக்கடையாக கண்மாயில் கலக்கிறது. இதனால் நீர் நிலை மாசுபடுகிறது. கண்மாய் பராமரிப்பு இல்லாததால் கண்ணுக்கு எட்டிய தூரம் கண்மாயில் ஊணான் செடியும், களை செடிகளும் போட்டி போட்டு வளர்ந்து, நீரினை உறிஞ்சி விவசாயத்தை பாழ்படுத்துகிறது. கண்மாயில் 20 ஏக்கர் ஆக்கிரமித்து தென்னை, மா மரங்களை வளர்ந்துள்ளனர்.
நிதி வழங்காததால் பராமரிப்பில் சிக்கல்
பிச்சை, தலைவர், நீரினை பயன்படுத்துவோர் சங்கம், எ.புதுக்குளம் கண்மாய், பெரியகுளம் : வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாய தேவைக்கு ஏற்ப மதகு வழியாக நீர் வெளியேற்றி பயன்படுத்துவோம். மூன்றாண்டுகளாக மதகு சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் விவசாயத்திற்கு பயன்படும் நீரின் அளவு குறைந்து கோடைகாலங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இக்கண்மாய் மீன் பாசி ஏலம் தொகையில் 50 சதவீதம் கண்மாய் நீரினை பயன்படுத்தும் சங்கத்திற்கு பராமரிப்பிற்காக வழங்கப்படும். இத் தொகை நீர் வளத்துறை இரு ஆண்டுகளாக வழங்கவில்லை. இத்தொகையை நீர் வளத்துறை வழங்கினால் மடைகளை சீரமைப்பு, தடுப்புச்சுவர் அமைத்தல், வண்டி பாதையை சரி செய்தல் உட்பட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மீன்பாசி ஏலத்தொகை கொடுக்காததால் பராமரிப்பு பணி செய்ய முடியவில்லை.
ஆனாலும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் சொந்த பணத்தில் இரு ஆண்டுகளாக ரூ.1.80 லட்சம் பராமரிப்பு செலவு செய்து சோர்வடைந்துள்ளோம். தற்போது எ.புதுக்குளம் படப்பு அடிப்பாதையில் இருந்து வடக்கே அரண்மனை தோப்பு வரை வண்டி பாதை குண்டும் குழியுமாக உள்ளது. விவசாயிகள் விளை பொருட்கள், ஈடு பொருள் கொண்டு செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
கண்மாய் துார்வார வேண்டும்
அமாவாசி, விவசாயி பெரியகுளம் : பருவமழை காலங்களில் கண்மாய் தண்ணீர் மறுகால் பாய்கிறது. மறுகால் நீர் வெளியேறும் இடத்தில் மண் அதிக அளவு தேங்குகிறது.
இதனால் விவசாயிகள் விளைபொருட்களை டூவீலரில் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. தண்ணீரில் செல்லும்போது வாகனங்கள் பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்குவதால் வாகனத்தோடு விளை பொருட்களோடு கீழே விழும் நிலையும், டூவீலர் இன்ஜின் பழுதாகிறது.
சம்பந்தப்பட்ட 200 மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் ரோடு அமைத்து தரவும் கண்மாய் கரையினை சீரமைத்தும், கண்மாய் தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பிப்.3ல் கலெக்டர் ஷஜீவனாவிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.