ஆடுகள், கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடுது தொடர்வதால் அச்சம்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை தொடர்ச்சியாக நாய்கள், கன்றுக்குட்டி வேட்டையாடி, நாட்டுமாடுகள் கிடைக்குள் நுழைய முயற்சித்தது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தாமதிப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி காமக்காபட்டி ரோடு பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் பகுதியில் ராஜா என்பவரது தென்னந்தோப்பில் ஜெயக்குமார் என்பவர் 200 செம்மறி ஆட்டு கிடை அமைத்தார். மார்ச் 5ல் ஆட்டுக்கிடையில் புகுந்த சிறுத்தை 5 ஆடுகளை கடித்து கொன்றது. மார்ச் 14 இரவு காமக்காபட்டி -கொடைக்கானல் ரோட்டில் தங்கப்பாண்டி என்பவரது வீட்டிற்கு வெளியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை மீண்டும் கடித்து கொன்றது.
காமக்காபட்டி புஷ்பராணி நகரில் தென்னை மரங்களில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய இரு கேமரா வைத்துள்ளனர். பத்து நாட்கள் ஆகியும் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் காமக்காபட்டியைச் சேர்ந்த பரமன் என்பவரது கன்றுக்குட்டியை கடித்து கொன்றது.
ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலா கூறுகையில், ‘காமக்காபட்டி பகுதியில் 150 நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறேன். இரு தினங்களுக்கு முன் மாட்டு கிடை அருகே தூங்கிக்கொண்டிருந்தேன். இரவு 11:30 மணிக்கு மாடுகள் கழுத்தில் கட்டியிருந்த மணி ஓசை பலமாக கேட்டது. கிடையில் ‘டார்ச்’ அடித்து பார்த்தபோது சிறுத்தை கிடைக்குள் நுழைவதற்கு முயற்சித்தது.
சத்தமிடவே ஓடிச்சென்றது. சிறுத்தை எதிரே திரும்பியிருந்தால் எனது உயிருக்கு சிக்கலாயிருக்கும். அந்தப்பகுதியில் 3 நாய்களை கடித்து கொன்றுள்ளது,’ என்றார்.
ரேஞ்சர் ஆதிரை கூறுகையில்,’ சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எந்தப் பகுதியில் சுற்றி திரிகிறது என தெரிந்தால் ‘ட்ரோன் கேமரா’ பயன்படுத்த உள்ளோம். விரைவில் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
காமக்காபட்டி, கெங்குவார்பட்டி,புஷ்பராணி நகர், ஜி.கல்லுப்பட்டி,ஏ.மீனாட்சிபுரம், ஸ்ரீ ராமபுரம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான உட்கடை கிராம மக்கள் தனியாக வெளியே செல்ல அச்சம் அடைந்துள்ளனர். விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்ல தயங்குகின்றனர். சிறுத்தையை விரைவில் கூண்டு அமைத்து பிடிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.