Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளில் பேட்டரி வாகனங்கள் பராமரிப்பு இன்றி வீணாகிறது! வாகன பராமரிப்பு குழு அமைக்க நடவடிக்கை தேவை

தேனி; ஊராட்சிகளில் கடந்த ஆண்டுகளில் துாய்மை பணிக்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடின்றி முடங்கியுள்ளன. மேலும் புதிதாக 100 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அளவில் வாகன பராமரிப்பு குழு அமைத்து வாகனங்கள் பழுது நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் துாய்மைப்பணிக்காக சில ஆண்டுகளாக பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த வாகனங்கள் 6 மாதங்கள் நல்ல முறையில் பயன்படுகிறது. அதன்பின் சிறு, சிறு பழுது ஏற்படுகிறது. அந்த பழுதினை உரிய நேரத்தில் சீரமைத்து பயன்படுத்தாமல் அப்படியே ஓரம் கட்டி ஊராட்சிகளில் நிறுத்தி விடுகின்றனர். பராமரிப்பு செய்து பயன்படுத்த ஊராட்சி நிர்வாகங்களை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் அறிவுறுத்தினாலும் அவற்றை பராமரிப்பது இல்லை. இதனால் பல ஊராட்சிகளில் பேட்டரி வாகனங்கள் பழுதாகி மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் மாவட்டத்திற்கு துாய்மை பாரத திட்டத்தில் புதிதாக 100 பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், ‘பேட்டரி வாகனங்களை இயக்க தனியாக டிரைவர் நியமிக்கப்படுவதில்லை. துாய்மை காவலராக பணிபுரியும் பெண்கள் மூலம் வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது. வாகனங்கள் வழியில் பழுதானால் அவற்றை எடுத்து வருவதில் சிரமம் நிலவுகிறது. பேட்டரி வாகனங்களை பராமரிப்பிற்கு தனி நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும்.

வாகனங்களை பராமரிப்பு செய்ய ஒன்றிய அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ வாகன பராமரிப்பு குழு அமைக்க வேண்டும். பேட்டரி வாகனங்கள் பழுது என புகார் வந்தால் அடுத்த ஓரிரு நாட்களில் பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு குழு அமைக்காவிட்டால் எத்தனை வாகனங்கள் புதிதாக வாங்கினாலும் அவை சில மாதங்களிலேயே பழுதாகி காட்சி பொருளாகி விடுவதை தவிர்க்க இயலாது’, என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *