குமுளி மலைப் பாதையில் மண் சரிவு மழைக்கு முன் சீரமைக்க வலியுறுத்தல்
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை துவங்குவதற்கு முன்பு சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன் வர வேண்டும்
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம். 2018ல் பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டது.
அதன் பின் மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து கற்களால் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இருந்த போதிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருந்தது.
தற்போது பழைய போலீஸ் சோதனைச் சாவடி, இரைச்சல் பாலம் அருகே ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொண்டை ஊசி வளைவு அருகே 2 இடங்களில் பாறை சரிந்து விழும் அபாயமும் உள்ளது.
ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும். கனமழை பெய்யும் போது மண்சரிவு அதிகரிக்கும். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மலைப்பாதையில் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் கற்களால் தடுப்புச் சுவர் அமைத்து மண் சரிவு ஏற்படுவதை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்