கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து உற்சாகம்
மாவட்டத்தில் நேற்று கோகுலாஷ்டமி தினத்தை முன்னிட்டு கிருஷ்ணன், பெருமாள் கோயில்களிலும், பள்ளிகளிலும், ஹிந்து அமைப்புகளின் சார்பிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
பழனிசெட்டிபட்டியில் உள்ள ராதா சமேத கோபாலகிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் குழந்தை கிருஷ்ணர் தொட்டிலில் இட்டு, நடத்தப்படும் ஆராட்டு விழா, பூஜைகள் நடந்தது. ராதா – கிருஷ்ணன் வேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு கோயில் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. நாயுடு மகாஜன சங்க தலைவர் ராமராஜ், கவுரவத் தலைவர் வீரராஜ், துணைத் தலைவர் வெங்கிடசாமி, செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பஞ்சராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டன.
அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பரந்தாமன் தலைமையில் விழா வகித்தார். பள்ளி கல்வி சங்கச் செயலாளர் பாக்யகுமாரி முன்னிலை வகித்தார். எல்.கே.ஜி., முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள் கிருஷ்ணர் – ராதை நடனப் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் பங்கேற்றனர். மாறுவேடப் போட்டியில் ஹன்சிகாஸ்ரீ, கபிலேஷ்ராம் முதலிடமும், குருவரதன், லோகிதா இரண்டாமிடமும், மித்ரன், நித்ரா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். நடனம், மாறுவேடப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி ஆசிரியைகள், சித்ரா, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, ராஜூ, கவிதா, வாணிஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர். துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வினோத்குமார், கார்த்திகேயன் செய்திருந்தனர்.
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. நாம சங்கீர்த்தனம்,பஜனை, சிறுவர்கள், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை அலங்காரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
போடி:- சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர் சீனிவாச பெருமாள் குருவாயூர் கிருஷ்ணர் தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சலவை கல்லால் ஆன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரின் தரிசனம் பெற்றனர். குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் ராதை வேடம் அணிந்து வந்தனர்.
மூணாறு: காளியம்மன், நவகிரக, கிருஷ்ணன் கோயில் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. கிருஷ்ணன், ராதை, வேடமணிந்த மழலையர்களின் ஊர்வலம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரில் வலம் வந்து காளியம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. அதில் மழலையர்களுடன் பெற்றோரும் பங்கேற்றனர். அதன்பிறகு கிருஷ்ணருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. கோயிலில் உறியடி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தன.