விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சிற்கு முட்டு கொடுத்த தேர் தடுப்பு கட்டை
பெரியகுளம் : தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே டூவீலர் மீது அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். ஸ்டேஷன் அருகே நிறுத்திய பஸ் நகராமல் இருக்க தேர் தடுப்பு கட்டை முட்டு கொடுத்து நிறுத்தி உள்ளனர்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த போர்வெல் ஏஜன்ட் கிருஷ்ணசாமி 60. நேற்று காலை லட்சுமிபுரம் தேனி ரோடு டீ கடை முன் டூவீலரை ‘ஸ்டார்ட்’ செய்து கொண்டிருந்தார். அப்போது பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு டவுன்பஸ் கிருஷ்ணசாமி மீது பிரேக் பிடிக்காமல் மோதியது.
பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்படுத்திய பஸ் (டி.என்.57 எண் 1861) டிரைவர் சேதுவை 59, தென்கரை எஸ்.ஐ., கர்ணன் கைது செய்து பஸ்சை பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் தேர் நிறுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு வந்தனர்.
அந்த பஸ் நகராமல் இருக்க டயரில் கோயில் தேரின் தடுப்பு கட்டையால் முட்டு கொடுத்து நிறுத்தினர்.
அரசு பஸ்கள் முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுதாவதும், விபத்து ஏற்படுவதும் தொடரும் நிலையில் இங்கு தேர் கட்டை முட்டு கொடுத்த நிலையில் பக்தர்கள் முகம் சுளித்தனர்.