Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிய வகை பறவைகள்

கூடலுார் : தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் பல புதிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜன.29ல் துவங்கியது. பறவைகள் வாழ்விடத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 இடங்களில் இக்கணக்கடுப்பு நடத்தப்பட்டது.

கேரள வேளாண் பல்கலை, பெங்களூரு வனவிலங்கு ஆய்வு மையம், கேரள கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலை, மலபார் கிறிஸ்துவ கல்லூரி மாணவர்கள், திருவனந்தபுரம் ஓடோனேட் ஆய்வுகள் சங்கம், கோட்டயம் இயற்கை சங்கம், மலபார் விழிப்புணர்வு மற்றும் மீட்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் 54 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இவர்களுடன் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.

கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்த நிலையில் பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இதில் அழிந்து போகும் அபாயத்தில் 16 இனங்களும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1ல் சேர்க்கப்பட்ட 33 வகையான பறவைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் 24 வகையான பறவைகளும் அடங்கும்.

இதில் ப்ளூத்ரோட் (லுசினியா ஸ்வெசிகா), அல்ட்ராமரைன் பிளைகேட்சர் (பிசெடுலா சூப்பர்சிலியாரிஸ்), ரெட் பிரெஸ்டட் பிளைகேட்சர் (பிசெடுலா பர்வா), டாவ்னி பிபிட் (அந்தஸ் கேம்பஸ்ட்ரிஸ்) ஆகிய நான்கு வகை புதிய பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் மூலம் பெரியாறு புலிகள் காப்பகத்தில் 345 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *