மேம்பாலத்திற்காக காட்பாடியில் தயாராகும் இரும்பு ‘ கர்டர்கள்’
தேனி; தேனியில் நடந்து வரும் மேம்பால பணியில் ரயில்வே தண்டவாளங்கள் மேல் பகுதியில் பொருத்தும் இரும்பு ‘கர்டர்கள்’ காட்பாடியில் தயாராகி வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேனி அரண்மனைப்புதுார் விலக்கு முதல் மதுரைரோட்டில் சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளி வரை ரூ.92 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் 2022 முதல் மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. சிப்காட் பகுதியில் பணிகள் நடக்கிறது. ரயில் தண்டவாளத்தின் மேற்பகுதில் பாலப்பணிகள் இதுவரை துவங்கவில்லை.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் தண்டவாளத்தின் மேற்பகுதியில் உறுதியான இரும்பு கர்டர்கள் அமைக்கப்படும்.
இந்த கர்டர்கள் வேலுார் மாவட்டம் காட்பாடியில் தயாராகி வருகிறது. ரயில்வே துறை சோதனை முடிந்த பின் மேம்பால பணி நடைபெறும் பகுதிக்கு கர்டர்கள் கொண்டு வர முடியும். தண்டவாளத்தின் மேற்பகுதியில் கர்டர்கள் பொருத்தும் பணி துவங்க 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றார்.