கம்பம் அரசு மருத்துவமனை கட்டட விபத்து முழு தரப் பரிசோதனை நடத்த வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் முடிவு
கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பிரசவ மேம்பாட்டு கட்டடத்தை முழுமையான தரப்பரிசோதனை நடத்த கலெக்டர் உத்தரவிட கோரிக்கை எழுந்துள்ளது. –
கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் மத்திய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் மகப்பேறு சிறப்பு பிரிவு கட்டடம் கட்டுமான பணிகள் நடக்கிறது.
தரை தளத்தை சேர்த்து 3 மாடி கட்டம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் முடிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
நேற்றுமுன்தினம் தரைதள போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களில் நம்பிராஜன் மீது சிலாப்,பில்லர் விழுந்து பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த பின் நடந்திருந்தால் கர்ப்பிணிகள் எத்தனை பேர் பலியாக நேரிடும்.
எனவே, கட்டடத்தின் உறுதி தன்மையை உறுதி செய்ய ஒட்டுமொத்த கட்டடத்தையும் தரப்பரிசோதனை செய்ய சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இச் சம்பவத்தை கண்டித்து சர்வகட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் செயலாளர் லெனின் கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கான சிறப்பு
விதி பின்பற்றவில்லை
இது குறித்து பொறியாளர்கள் சிலர் கூறுகையில், கட்டடத்தில் சிலாப் பதிக்கும் போது சுவரை குடைந்து கம்பி கட்டி ஆர்.சி. போட வேண்டும். ஆனால் இங்கு ஆங்கர் போட்டு பில்லர் மேல் சிலாப் பதித்துள்ளனர். ஆங்கர் தேவையில்லை என எடுத்துள்ளனர். இதனால் சிலாப்பின் அழுத்தம் தாங்காமல், பில்லர் விழுந்துள்ளது.
மருத்துவமனை கட்டடத்திற்கென சில சிறப்பு விதிமுறைகள் உள்ளது. அதாவது அரசு கட்டடம் வழக்கமாக கட்டும் போது ஆர்.சி.,க்கு 3 சட்டி மணல், ஒரு மூடை சிமென்ட் பயன்படுத்த வேண்டும். மருத்துவமனை கட்டடம் என்றால் 2 சட்டி மணல், ஒரு மூடை சிமென்ட் பயன்படுத்த வேண்டும். இது போன்ற பல சிறப்பு விதிமுறைகள் மருத்துவமனை கட்டடம் கட்டும் போது பின்பற்ற வேண்டும்.
எனவே, இப் பிரச்னையில் முழுப்பொறுப்பும் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஒப்பந்தகாரர்களையே சாரும் என்கின்றனர்.
எனவே கட்டப்பட்டுள்ள ஒட்டுமொத்த கட்டடத்தின் உறுதி தன்மையை மெய்ப்பிக்க அண்ணா தொழில்நுட்ப பல்கலை குழுவினரை நியமித்து தரப் பரிசோதனை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.