ஊராட்சிகள் மாநில நிதி குழு மானியம் கிடைக்காமல் திணறல்: செலவுக்கும், பணியாளர்கள் சம்பளம் இன்றியும் சிரமம்
ஆண்டிபட்டி- ஊராட்சிகளுக்கு மாநில அரசின் நிதி குழு மானியம் மூன்று மாதங்களாக வழங்காததால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் கட்டாய செலவுகளை மேற்கொள்ள முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.
ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவி காலம் ஜனவரி 5 ல் முடிந்தது. தற்போது ஊராட்சி நிர்வாகத்தை பி.டி.ஓ., துணை பி.டி.ஓ., மேற்பார்வையில் ஊராட்சி செயலாளர்கள் நிர்வகிக்கின்றனர். ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, பொதுக்கழிப்பறை பராமரிப்பு ஆகியவை அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகளாக உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப 5 முதல் 10 தற்காலிக தூய்மை பணியாளர்கள், குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களுக்கான தினக்கூலி அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த அடிப்படை செலவுகளுக்கு மாநில அரசு நிதிக்குழு மானியம் ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டும். இந்த நிதி, பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும். இவை கட்டாய செலவுகள், சம்பளத்திற்கு பயன்படுத்தப்படும். கடந்த மூன்று மாதமாக மாநில நிதி குழு மானியம் ஊராட்சிகளுக்கு வழங்க வில்லை. இதனால் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாநில நிதி குழு மானியமாக ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை அரசு வழங்கும். கடந்த காலங்களில் மாநில நிதிக்குழு மானியம் ஒரு மாதம் தாமதமானால் அடுத்த மாதத்தில் சேர்த்து கிடைத்துவிடும். நவம்பர், டிசம்பர், ஜனவரி 3 மாதங்களாகியும் அரசு மானியம் கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சிகளில் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய செலவுகளை ஊராட்சி செயலாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.2 லட்சம் வரை கடனுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பள நிலுவையாக ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.பல ஆயிரம் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர். மத்திய அரசு மூலம் வரவேண்டிய 15வது நிதி குழு மானியமும் இரண்டு தவணைகள் கிடைக்கவில்லை. ஊராட்சிகளில் திட்ட பணிகளும் கடந்த ஆறு மாதமாக மேற்கொள்ளவில்லை. ஊராட்சிகளுக்கு தேவையான அரசு நிதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.