ஏலக்காய் உற்பத்தி, ஏற்றுமதித் திறனை அதிகரிக்க புதிய திட்டம்!
ஏலக்காய் உற்பத்தி, ஏற்றுமதித் திறனை அதிகரிக்க புதிய திட்டம்! விவசாயிகள் பயன்பெற ஸ்பைசஸ் போர்டு அழைப்பு
மத்திய அரசின் வர்த்தகம்,- தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் போடி பைசஸ் வாரிய மண்டல அலுவலகத்தில் நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி, ஏலக்காய் உற்பத்தியை அதிகரிக்க புதிய விரிவாக்கத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இதில் பயனடையுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்துறையில் 2025– 2026க்கான 15வது நிதி ஆணையத்தின் கீழ் ரூ.422.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந் நிதியில் நறுமணப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனையை அதிகரிக்கவும், 26 வகையான புவிசார் குறியீடு பெற்றுள்ள நறுமணப் பொருட்களை அபிவிருத்தி செய்யவும், புதிய தொழில் முனைவோர்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் ஏலக்காய் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் வகையில் ஏலச் செடிகள் மறுநடவுத் திட்டம், தரமான இடுபொருட்களை வழங்குவது, நீர்நிலைகளை அமைப்பது, காப்பீட்டுத் திட்டம், நிலையான உற்பத்திக்கான விரிவாக்க செயல்பாடுகள் ஆகியவற்றை வாரியம் செயல்படுத்த உள்ளன.
மேலும் நறுமணப் பொருட்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக சந்தை விரிவாக்கம், அபிவிருத்தி, வர்த்தக ரீதியிலான தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்தல், தரப் பரிசோதனைக்கான ஆய்வகம் அமைத்தல் போன்ற விரிவாக்க செயல்பாடுகளும் மேற்கொள்ள இருக்கிறது.
போடி பைசஸ் வாரிய மண்டல துணை இயக்குனர் சிமந்தா சைகியா கூறியதாவது: இத்திட்டத்தில் பயனடைய ஆன்லைன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2024 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு பைசஸ் போர்டு இணையத் தளமான www.indianspices.com என்ற முகவரியிலும், அருகில் உள்ள பைசஸ் வாரிய மண்டல, கிளை அலுவலகங்களிலும் நேரடியாக சென்று பதிவு செய்து, பயன் பெறலாம்.’ என்றார்.