பயன்பாட்டிற்கு வந்த கூடலுார் புது பஸ் ஸ்டாண்ட்
கூடலுார் : கூடலுாரில் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் நேற்று திறப்பு விழா காணப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
கூடலுார் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி மற்றும் உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடந்து வந்தன. இப்பணி முடிவடைந்து நேற்று அமைச்சர் பெரியசாமி முன்னிலையில், அமைச்சர் நேரு காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கூடலுார் பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சி கவுன்சிலர்கள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பஸ் ஸ்டாண்டிற்குள் வந்த பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
பஸ் ஸ்டாண்டிற்குள் நிழற்குடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, 10 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் இருப்பு வைக்கும் அறை, கழிப்பறைகள், டூவிலர்கள் நிறுத்தும் பகுதி என அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது. அதனால் அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பெயரளவில் ஓரிரு பஸ்கள் மட்டுமே உள்ளே வந்து சென்றன.மற்ற அனைத்து பஸ்களும் மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றனர். இதனால் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதா, வெளியில் நிற்பதா என்ற குழப்பத்தில் இருந்தனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.