Saturday, April 19, 2025
Uncategorizedமாவட்ட செய்திகள்

பயன்பாடு குறைவதால் வெள்ளை வேஷ்டிகள் உற்பத்தி நிறுத்தம்: மாற்று ரகங்களை தேடும் ஜவுளி வியாபாரிகள்

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் 60 ஆண்டுக்கும் மேலாக வெள்ளை ரக வேஷ்டி உற்பத்தி,விற்பனை நெசவாளர்களுக்கு கை கொடுத்தது. பல ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவு, தனியார் நூற்பாலைகளில் 26, 30,40ம் நம்பர் நூல்களை கொள்முதல் செய்து 500க்கும் மேற்பட்ட கைத்தறிகளில் வெள்ளை வேஷ்டிகள், துண்டுகள் உற்பத்தி செய்து தலைச் சுமையாக கொண்டு சென்று வியாபாரம் செய்தனர். தேவை அதிகரிப்பால் வெள்ளை வேஷ்டியை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தனர். 1000 விசைத்தறிகளில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வேஷ்டிகள் உற்பத்தியானது.

நூற்பாலைகளில் கொள்முதல் செய்யப்படும் காரல் ரக நூல்களை சுத்தமான வெள்ளை நிறத்தில் மாற்றுவதற்கு சலவை பட்டறைகளும் செயல்பட்டு வந்தன. இங்கு சலவை செய்யப்படும் நூல்களில் கிடைக்கும் வெண்மை நிறம் தனித்துவமாக இருந்தது. இங்கு நெய்யப்படும் வெள்ளை வேஷ்டிகள் தமிழகம் மற்றும் இலங்கைக்கும் ஏற்றுமதி செய்தனர். 2000 ஆண்டு வரை இங்கு உற்பத்தி செய்த வெள்ளை ரக வேஷ்டிகள் கிராக்கியுடன் விற்பனையானது. தூய்மையான பருத்தி நூலில் பலவகை பார்டர்களுடன் நெய்யப்பட்ட வேஷ்டிகளுக்கு போட்டியாக, நகரங்களில் இருந்து மில்களில் உற்பத்தி செய்யப்பட்ட பாலிஸ்டர் கலந்த வேஷ்டிகள் வந்தன. இந்த வேஷ்டிகளுக்கு இடையேயான விற்பனை விலை அதிகம் இருந்ததால் சக்கம்பட்டியில் உற்பத்தியான வேஷ்டி விற்பனை படிப்படியாக குறைந்தது. கேரளா, ஆந்திராவிலும் வெள்ளை வேஷ்டிகளுக்கான மார்க்கெட் குறைந்து, கலர் ரக வேஷ்டிகளின் தேவை அதிகமானது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் சக்கம்பட்டியில் வெள்ளை ரக வேஷ்டிகளின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தொடர்ந்து உயர்ந்த நூல் விலை, நெசவாளர் கூலி என வெள்ளை ரக வேஷ்டிகளின் விலை ரூ.200 வரை உயர்ந்தது.

மில்களில் 80,100ம் நம்பர் நூல்களில் உற்பத்தி செய்யப்படும் வேஷ்டிகளுடன் போட்டி போட முடியாமல் விற்பனை பாதித்தது. இதனால் உற்பத்தியை நிறுத்தி மில் ரக வேஷ்டிகளை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்யும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டனர். இளைய தலைமுறையினர் வெள்ளை வேஷ்டி உடுத்துவதில் ஆர்வம் இல்லை. அரசியல்வாதிகள் கூடுதல் விலையில் விற்கப்படும் மில் ரக வேஷ்டிகளையே வாங்க விரும்புகின்றனர். வெள்ளை ரக வேஷ்டிகளுக்கு சலவை செலவு அதிகமாவதால் நடுத்தர வர்க்கத்தினர், தொழிலாளர்கள் வெள்ளை ரக வேஷ்டிகளை தவிர்த்து கைலிகள், கலர் வேஷ்டிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

விசேஷ நாட்களில் கூட வெள்ளை வேஷ்டிகள் உடுத்துவதை விரும்புவதில்லை. இதனால் வெள்ளை ரக வேஷ்டிகள் காட்சி பொருளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *