குடிநீர் தட்டுப்பாட்டால் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அவதி பள்ளி நேரத்திற்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தனியார் டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளன
இங்குள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, தேவதானப்பட்டி உட்பட 30 க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து மாணவ,மாணவிகள், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1900பேர் படிக்கின்றனர். பள்ளிக்கு தினமும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள 7500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியிலிருந்து வினியோகிக்கப்படும். குடிநீர் மதியம் 12:00 மணிக்குள் காலியாகிவிடும். இதனால் சில மாணவர்கள் வீட்டிலிருந்து இரு குடிநீர் கேன்கள் கொண்டு வருகின்றனர். கோடை காலம் துவங்குவதற்குள் கூடுதலாக 16 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பஸ் சேவை நிறுத்தம்: பெரியகுளம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காலை 8:00 மணிக்கு தேவதானப்பட்டி புறப்படும் தனியார் டவுன் பஸ் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் வழியாக சில்வார்பட்டி பள்ளி முன்பு 8:30 மணிக்கும், அதே பஸ் தேவதானப்பட்டிக்கு சென்று விட்டு 8:50 மணிக்கு பள்ளி முன்பு மாணவர்களை இறக்கி விடுவர்.
இது மாணவர்களுக்கு பயனாக இருந்தது. டவுன்பஸ்சிற்கு போதிய வசூல் இல்லாத காரணத்தால் இரு மாதங்களாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள்அவதிப்படுகின்றனர்.
தலைமையாசிரியர் பாண்டியன் கூறுகையில்: குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டி தருவதற்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ., விடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் அந்த நேரத்தில் அரசு பஸ் இயக்கவேண்டும் என திண்டுக்கல் கோட்ட மேலாளர், தேனி மண்டல மேலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.