இடையன் குளத்திற்கு நீர் வரத்து தடை பட்டதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு மறுகால் ஓடை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் தவிப்பு
உத்தமபாளையம்: புதுப்பட்டி இடையன்குளத்திற்கு காட்டோடை நீர் வரத்து தடைபட்டதால் 3 கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது.
உத்தமபாளையம் அருகே புதுப்பட்டி இடையன்குளம் 20 ஏக்கர் பரப்பளவிலானது. புதுப்பட்டியில் இருந்து சில கி.மீ. தூரத்தில் இடையன்குளம் உள்ளது. இக் குளத்தின் நீர் பாசனத்திற்கு நேரடியாக பயன்படாவிட்டாலும் புதுப்பட்டி, ஊத்துக்காடு, கோவிந்தன்பட்டி, காக்கில் சிக்கையன்பட்டி கிராமங்களில் உள்ள தோட்ட கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இக்குளம் 20 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிக்கப்பட்டு புளிய மரங்கள் வளர்க்கப்பட்டது. தற்போது பலன் தரும் வகையில் குளத்தின் ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. மற்ற கண்மாய்களை போலவே இந்த கண்மாயும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை. மரங்கள் மட்டுமே வளர்த்துள்ளனர்.
இந்த கண்மாய்க்கு மலைக்குன்றுகளில் இருந்து வரும் காட்டோடைகளின் நீர், 18 ஆம் கால்வாய் அமைக்கப்பட்ட பின் தடுக்கப்பட்டு விட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டியதால் வெள்ள நீர் தடைபட்டது. தற்போது 18 ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் போது, கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கிறது. புயல், மழை காலங்களில் 18 ம் கால்வாயில் முழு கொள்ளளவு செல்லும் போது, இந்த கண்மாய்க்கு நீர் திருப்பி விடப்படுகிறது.
ஆனால், கண்மாய் நிரம்பிய பின் நீர் செல்லும் மறுகால் ஓடை 2 கி.மீ. தூரத்திற்கு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இலவ மரங்களை வளர்த்துள்ளனர். இது ஒருபுறம் என்றால் கண்மாயில் மண் அள்ள வழங்கிய அனுமதியால் கண்மாய் பல இடங்களில் ஆழமாகி விட்டது.
இதனால் கண்மாய் முழுவதும் மேடு, பள்ளங்களாகி தூர் வார முடியாத நிலை ஏற்பட்டு உருமாறி உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் முழுமையாக தேக்க முடியவில்லை. முழு கொள்ளளவு தண்ணீர் தேங்காததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.