6 ஆண்டுகளாக தகவல் அளிக்காத நுாலக அலுவலருக்கு அபராதம்
தேனி:தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டவருக்கு ஆறு ஆண்டுகள் தகவல் அளிக்காமல் அலைகழித்ததாக தேனி மாவட்ட பொது நுாலக தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் முகமது ஷகில் அக்தர் உத்தரவிட்டார்.
தேனி மாவட்டம் போடி தாலுகா மேலசொக்கநாதபுரம் கிளை நுாலகர் திருநாவுக்கரசு. இவருக்கு மூன்றாம் நிலை நுாலகர் பதவி உயர்வு தவறாக வழங்கப்பட்டுள்ளது குறித்து முதல்வரின் தனிப்பிரிவிற்கு 2015 பிப்ரவரியில் ஆர்.டி.ஐ., ஆர்வலர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதற்கு மாவட்ட பொது நுாலக தகவல் அலுவலர் நடவடிக்கை எடுக்காமல் முதல்வரின் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்தார். ராமகிருஷ்ணன் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கடித நகல் வழங்க கோரினார். ஆனால் நுாலகத் துறையினரால் அக்கடிதம் முதல்வரின் தனிப்பிரிவு ஆன்லைன் முனையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கப்பட்டன. பிறகு ராமகிருஷ்ணன் முதல்வரின் தனிப்பிரிவிற்கு 16 முறை புகார் மனு அளித்தும் பதில் கிடைக்கவில்லை.
இதனால் ராமகிருஷ்ணன் கவர்னருக்கு 2018 ஜன.,19ல் புகார் மனு அளித்தார். அதற்கும் பதில் கிடைக்காததால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். மாநில தகவல் ஆணையர் முகமது ஷகில் அக்தர், ”கவர்னர் அலுவலக பொது தகவல் அலுவலரிடம் உரிய விளக்கம் கோரினார். பின் முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தை முறைகேடாக பயன்படுத்திய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க நுாலகத்துறைக்கு உத்தரவிட்டார். நுாலகத்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதி விசாரணை சென்னையில் 2025 பிப்., 3ல் நடந்தது. இதில் 6 ஆண்டுகளாக தகவலை தராமல் இழுத்தடித்த மாவட்ட பொது நுாலகத்துறையின் பொதுத் தகவல் அலுவலர், இழப்பீடாக ராமகிருஷ்ணவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவதுடன், 15 நாட்களுக்குள் கோரிய விபரங்களை ஆவணங்களாக அளித்து, அதுகுறித்த அறிக்கையை ஆணையத்தில் சமர்பிக்க,” உத்தரவிட்டார்.