குண்டளை அணையில் நுழைவு கட்டணம் வசூல் துவக்கம்
மூணாறு : குண்டளை அணையில் படகு குழாமுக்கு செல்லும் பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள குண்டளை அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். கேரள மின் வாரியத்தினரின் பராமரிப்பில் உள்ள அணையில் ஹைடல் டூரிசம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தேனிலவு தம்பதியினருக்கு என இயக்கப்படும் ‘காஷ்மீரியா சிக்காரியா’ வகை படகுகள் மிகவும் பிரபலம்.
அங்கு படகு சாவரிக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஹைடல் டூரிசத்திற்கு வருவாயை அதிகரிக்கும் வகையில் படகு குழாம் பகுதியில் ரூ. 6 லட்சம் செலவில் சிறுவர்களுக்கு பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டன. அதனால் படகு குழாம் பகுதிக்குச் செல்ல நேற்று முன்தினம் முதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நபர் ஒன்றுக்கு ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.