மேகமலை நீர் தேக்கங்களில் குறையும் நீர்மட்டத்தால் மின் உற்பத்திக்கு சிக்கல்
கம்பம்: மேகமலையில் உள்ள நான்கு நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருவதால், சுருளியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகளில் சேகரமாகும் தண்ணீரை வைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வண்ணாத்தி பாறை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சுருளியாறு நீர் மின் நிலையத்திற்கு 2200 மீட்டர் நீளமுள்ள குழாய் மூலம் தண்ணீரை கீழே இறக்கி மின் உற்பத்தி நடைபெறுகிறது. 35 மெகாவாட் உற்பத்தி திறன் இருந்தாலும் தேவைக்கேற்ப 5, 10, 15 மெகாவாட் என நேரத்திற்கு தகுந்தவாறும், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்யப்படும். ஆண்டு முழுவதும் குறிப்பாக கோடையிலும் இங்கு மின் உற்பத்தி நடைபெறும்.
ஆனால் தற்போது நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்துவருகிறது.
கடும் வெப்பம் நிலவுவதால் நீர் ஆவியாவது அதிகரித்து வருகிறது. எனவே மார்ச் மற்றும் ஏப்ரலில் மின் உற்பத்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.மழை பெய்தால் மட்டுமே வரும் மாதங்களில் மின் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை எழுந்துள்ளது.